தற்போது வளர்ந்து வட்ட இந்த நவீன காலத்தில் எங்க பார்த்தாலும் கேமரா செய்தியாளர்கள் என்று ஊடகமாக இந்த உலகம் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் தனித்தனியாக சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி செய்தியாளர்களாக மாறி வருகிறார்கள். அதில் கேமரா மைக் எதுவும் இல்லாதவர்கள் கூட கையடக்கமாக இருக்கின்ற மொபைல் ஃபோனை வைத்து செய்தியாளர்களாக உருவாகியிருக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு மத்தியில் செய்தியாளர்கள் என்றால் யார் யார்? யாரை உண்மையில் செய்தியாளர் என்று குறிப்பிடலாம்; செய்தியாளர் எத்தனை வகைகளாக இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொன்றாக பார்க்க போகிறோம்.
நாளிதழின் நாடி நரம்புகளாக விளங்குபவர்கள் செய்தியாளர்கள் தான். பொதுமக்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களும் செய்தியாளர்கள் ஆவார்கள். இவர்களுக்கு பொதுமக்களிடத்தில் மிகுந்த மரியாதையும் தனி இடமும் உண்டு. ஆனால் சில வேலைகளில் இவர்கள் மக்களின் வெறுப்புக்கும் தாக்குதலுக்கும் ஆளாக வேண்டிய நிலை இருக்கின்றது. தொடக்க காலத்தில் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்திகளை கடிதம் மூலம் செய்தித்தாளர்களுக்கு அனுப்பினார்கள்.
![]() |
Who is Reporters |
கடிதத்தை வடமொழியில் 'நிருபம்' என்றதனால் செய்திகளை எழுதி அனுப்பியவர்களை 'நிருபர்கள்' என்றார்கள். அதுவே காலப்போக்கில் 'செய்தியாளர்கள்' என்ற தமிழ் பெயராக மாறியது.
ஒரு காலத்தில் செய்தியாளர்களின் பெயர்களை இதழ்கள் வெளியிடுவதில்லை பொதுமக்களும் தெரிந்து கொள்ள விரும்பியது இல்லை ஆனால் இப்பொழுது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. சினிமா பிரபலங்கள் சமூக ஊடக பிரபலங்களுக்கு ஈடாக தற்போது செய்தியாளர்களும் பிரபலமாக மாறி வருகிறார்கள். அதனால் பெரிய நாளிதழ்கள் முக்கியமான செய்திகளோடு அவற்றை எழுதிய செய்தியாளர்களின் பெயரையும் வெளியிடுகின்றன. இது சிறந்த செய்தியாளர்களுக்கு உரிய பெயரையும் புகழையும் தேடித் தருகின்றன.
இது செய்திகளை தொகுத்து வழங்கபவர்கள் அதாவது ஓரிடத்தில் நிகழும் நிகழ்வுகளை படம் பிடித்து அங்கு நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து காணொளிகளாக உருவாக்கி தருபவர்களையும் செய்தியாளர்களாக அவர்களது பெயரையும் செய்தி நாளிதழ்களில் வெளியிடுகிறார்கள்.
செய்தியாளர்கள் என்றால் யார்?
நாளிதழுக்கு வேண்டிய செய்திகளை இனம் கண்டு நாடி தேடிச்சென்று சேகரித்து தொகுத்து தருபவர்கள் செய்தியாளர்கள் ஆவார்கள் செய்தியாளர்கள் இல்லை என்றால் செய்தித்தாள்கள் இல்லை. இதை யாரும் மறுத்து பேச முடியாது.
ஒரு கொத்தனாருக்கு செங்கல் எப்படி முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள்; ஒரு செய்தித்தாள் என்பது அதனுடைய செய்தியாளர்கள் எப்படி உருவாகிறார்களோ அப்படி தான் அமையும் என்கிறார் எம்.வி.காமத்.
"ஒரு செய்தித்தாளின் பெருமையும் நம்பிக்கையும் பெரிதும் அதனுடைய செய்தியாளர்களையே சார்ந்துள்ளன. அவர்களால் ஒரு செய்தித்தாளை ஆக்கவோ அழிக்கவோ முடியும். அவர்கள்தான் ஒரு செய்தித்தாளிற்கு வாழ்வளிக்கும் குகுறி போன்றவர்கள்" என்று ரெங்கசாமி பார்த்தசாரதி குறிப்பிடுகின்றார்.
"தொழில்முறைச் செய்தியாளர்கள் வாசகரின், பார்வையாளரின் அல்லது கேட்பவரின் அமர்த்தப்பட்ட கண்களாகவும், காதுகளாகவும், கால்களாகவும், மூளையாகவும் நிகழ்கின்றனர். ஒரு செய்தியாளர் வாசகரின் சிந்திக்கும் பதிலானியாவார் (Thinking Agent) என்றும், செய்தியாளர் இதழியலின் இதயமாவார்," என்றும், ஜேம்ஸ் எம்.நீல் என்பவரும் சூசானே எஸ்.பிரவுன் என்பவரும் கூறுகின்றனர்.
"பத்திரிகைகள், நாட்டின் கண்களும் காதுகளும் ஆகும் என்றால், செய்தியாளர்கள் பத்திரிகைகளின் கால்களும் கைகளும் ஆவார்கள்" என்று எம்.செல்லையா விளக்குகின்றார்.
ஒரு செய்தித்தாளின் அடிப்படையாகச் செய்தியாளர் திகழ்கின்றார். செய்தித் தாளுக்கு வேண்டிய அடிப்படையான செய்திகளைத் திரட்டித் தருகின்ற அருமையான. கடினமான, சுவையான பணி அவருடையது. அவர் சாதாரண மனிதர்தான் என்றாலும், தொழிலைச் செய்கின்றபொழுது தெரிந்தவராகப் பணியாற்ற வேண்டியதிருக்கின்றது.
கடலில் மூழ்கி சிறந்த செய்தியாளர்கள் வரலாறு படைத்திருக்கின்றார்கள். முத்தெடுப்பது போலப் பல செய்திகளை வெளிக்கொணர்ந்து பெருமையும் புகழும் பெற்ற செய்தியாளர்கள் இருக்கின்றனர். ஆதலால் தான் அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தை (Associated Press) அமைத்த மேல்வைல் இஸ்டோன் (Melvile E.Stone) செய்தியாளர்களை மதிப்புடையவர் என்று கூறுகின்றார்.
பொதுவாக எல்லோகும் ஏதாவது செய்திகளைப் பெற்று மற்றவர்களிடம் பரப்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் எல்லோரும் செய்தியாளர் ஆவதில்லை. ஒரு செய்தியாளர், மற்றவரிடமிருந்து வேறுபடுவதற்குப் பின்வரும் காரணிகள் அடிப்படையானவை.
- அவர் செய்திகளைப் பரப்புகின்ற வாசகர்களின் எண்ணிக்கை.
- தருகின்ற செய்தியின் பயன்பாடு; சுவை.
- செய்யும் தொழிலில் பெற்றிருக்கும் அறிவு, செய்யும் முறை, நோக்கம்.
செய்தியாளர்களின் வகைகள்:
செய்தியாளர்களை அவர்கள் செய்கின்ற வகைப்படுத்தலாம். நகரச் செய்தியாளர்கள்:
எந்த இடத்திலிருந்து செய்தித்தான் வெளிவருகின்றதோ, அங்குச் செய்திகளைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை நகர அல்லது உள்ளூர்ச் செய்தியாளர்கள் என்கின்றனர். இவர்கள் வட்டார மக்கள் விரும்பிப் படிக்கின்ற சுவையான செய்திகளைச் சேகரித்துத் தருகின்றனர்.
1.நகர்ப்புறச் செய்தியாளர்கள்:
மாநிலத்தின் மாவட்டத் தலைநகரங்களில் இருந்துகொண்டு செய்திகளைச் சேகரித்து அனுப்புகின்றவர்களை நகர்ப்புறச் செய்தியாளர்கள் என்று கூறலாம்.
2.தேசியச் செய்தியாளர்கள் :
நாட்டின், மாநிலங்களின் தலைநகரங்களில் இருந்து கொண்டு செய்திகளைத் தொகுத்துத் தருகின்றவர்கள் தேசியச் செய்தியாளர்களாவார்கள்.
3.வெளிநாட்டுச் செய்தியாளர்கள்:
வெளிநாடுகளில் தங்கி, உலகச் செய்திகளைத் திரட்டித் தருகின்ற பணியை வெளிநாட்டுச் செய்தியாளர்கள் செய்கின்றனர். பொதுவாக, ஒரு செய்தித்தாளில் நேரடிப் பணியாளராக இல்லாமல், அனுப்புகின்ற செய்திகளின் அளவிற்கேற்பப் பணம் பெறுகின்றவர்களைப் 'பகுதிநேரச் செய்தியாளர்' (Part Time Reporter) என்கின்றனர். ஓரிதழின் முழுநேர ஊழியராக இருந்துகொண்டு செய்தி திரட்டுபவரைச் 'செய்தியாளர்' (Correspondents) என்று குறிப்பிடுகின்றனர். நாடாளுமன்ற, சட்டமன்றச் செய்திகளை (Lobby Correspondents) வழங்குபவர்களை 'மன்றச் செய்தியாளர்கள்' என்றழைக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியையோ, வெளிநாடு செல்லும் தலைவர்களைத் தொடர்ந்து சென்றோ,எல்லோரும் அறிய விரும்பும் நாட்டு நடப்புகளையோ பற்றி, செய்திகளைத் திரட்டித்தருபவர்கள் 'சிறப்புச் செய்தியாளர்கள் '(Special Correspondents) எனப் பெயர்பெறுகின்றனர்.
தொழில் அடிப்படையில் செய்தியாளர்கள் :
செய்யும் தொழிலின் திறமையின் அடிப்படையிலும் செய்தியாளர்களை வகைப்படுத்துவதும் உண்டு.
- பார்ப்பதை அப்படியே எழுதுபவர் செய்தியாளர் (Reporter)
- பார்ப்பதோடுகூட, தான் ஊகித்துணர்வதையும் சேர்த்துத் தருபவர் விளக்கச் செய்தியாளர் (Interpretative Reporter)
- பார்க்காதவற்றைப் பற்றிக் கூட, அதன் பொருள் இதுதானென்று தீர்மானித்து,நயம்படத் தருபவர் செய்தி வல்லுநர் (Expert Reporter) என்று அழைக்கப்படுவர்.
செய்தியாளர்களுக்கு உரிய பணிகளும் பொறுப்புகளும்
செய்தியாளர் உண்மையில் தகவல்களைப் பரப்பும் சமுதாயக் கல்வியாளராகப் பணியாற்றுகின்றார். ஒரு வகையில் அவரது பணி சமுதாயத் தொண்டாகும்.
மக்களாட்சியில், நாட்டின் அன்றாட நடப்புகளை உடனுக்குடன் தெரிவித்து, மக்கள் விழிப்போடு செயல்படத் தூண்டுகின்ற பணியைச் செய்தியாளர் மேற்கொள்கின்றார்.
1.விழிப்பான பணி:
செய்ய செய்தியாளரின் பணி மிகவும் கடினமானதாகும். இருபந்து நான்கு மணிநேரமும் அவர் விழிப்போடு செய்திகளைத் தேடி அலைய வேண்டும். எங்கிருந்து செய்தி, எப்படி வெடித்துச் சிதறுமென்று கூறமுடியாது. நாளிதழில் ஒவ்வொரு செய்தியாளரும் செல்ல வேண்டிய இடத்தையும் (Beat) என்ன? பணி (Assignment) வேண்டுமென்பதையும் தலைமைச் செய்தியாளர் ஒதுக்குவார். ஆனால் பணியைச் செய்துமுடிக்கக் கடினமாக உழைக்க வேண்டும். துணிவும் திறமையும் உள்ள செய்தியாளர்கள் 'கருமமே கண்ணாய்' உழைத்தால் சிறப்பாகச் செய்திகளைத் தேடித் திரட்டித் தந்து புகழ்பெற முடியும்.
2.ஆபத்தான பணி:
செய்தியாளர் நடக்கும் பாதையில் மலர்கள் தூவப்பட்டிருப்பதில்லை. நெருஞ்சி முள் காட்டிற்குள் நடபயில்பவர்களைப் போன்றே செய்தியாளர்கள் பணிபுரிய வேண்டியுள்ளது. உண்மைகளை வெளிக்கொணரும் பணியைச் செய்வதால், அதனால் பாதிக்கக் கூடியவர்கள் எப்பொழுதும் செய்தியாளர்களுக்குப் பாதகங்கள் செய்யத் தயங்கமாட்டார்கள். செய்தியாளர்கள் அடி தடிக்கும், அவமானத்திற்கும் அச்சுறுத் தலுக்கும் ஆளாகின்றனர். செய்தியாளர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்க வேண்டும்.செய்தியாளர்களைச் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சிகளும் கூட நடை பெற்றிருக்கின்றன.
3.செய்தி திரட்டும் பணி :
எது செய்தியாகும் என்பதை முதலில் தெரிந்தெடுத்து, அந்தச் செய்தி உண்மையானதா என்பதை அறிந்து, செய்தியின் மூலத்தை அணுகி, செய்தியைந் திரட்டித் தருவது தான் செய்தியாளர் பணி காலத்தோடு போட்டியிட்டு விரைந்து செயல்படுகின்ற செய்தியாளர் வெற்றி பெறுகின்றார்.
செய்தியைத் திரட்டுவதில் சில நிலைகள் உள்ளன. முதலாவதாக, செய்தியாளர் செய்திக்குத் தன்னை வெளிப்படுத்திக் (Exposure) கொள்ளவேண்டும். அதாவது செய்தியின் மூலத்தோடு நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும். முடித்தால் செய்திக்குரிய நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைந்து நேரடியாகச் செய்தியைப் பெறவேண்டும். அல்லது செய்தி வழங்குபவரை அணுகிச் செய்தியை அறிந்துகொள்ள முயலவேண்டும்.
இரண்டாவதாக, நடந்தவற்றைப் பார்க்க வேண்டும். விருப்பு, வெறுப்பின்றி நேரடியாகக் காணக்கூடியவற்றைக் கவனித்து நோக்க வேண்டும். உண்மையை அறிந்து எழுத இப்படிப் பார்வையிடுதல் துணை செய்கின்றது. அறிக்கைகளாகவோ, புள்ளி விவரங்களாகவோ செய்திகள் கிடைத்தால் அவற்றைப் புரித்து படித்து, அவற்றிலுள்ள செய்திகளை மட்டும் தெளிவான முறையில் வழங்குவது செய்தியாளர் பணி ஆகும்.
மூன்றாவதாக, பார்த்தவற்றையும், கேட்டவற்றையும் நினைவில் பறித்துக் கொள்ள வேண்டும். செய்தியாளருக்கு நினைவாற்றல் என்பது கைவந்த கலையாக மாற வேண்டும். முதலில் குறிப்புகள் எடுத்துக்கொண்டு பின்பு விரித்து எழுத நினைவாற்றல் துணை செய்கின்றது. பதிவுசெய்யும் கருவிகளைப் (Tap Recorder) பயன்படுத்தலாம். இக்காலத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இப்பணிகளைச் செய்ய முடிகின்றது. ஓர் திறன்பேசி (செல்போன்) இருந்தாலே அனைத்துப் பணிகளையும் செய்துவிட முடியும் என்கின்ற வகையில் இதழியல் துறையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.
நான்காவதாக,கிடைக்கின்ற விவரங்களில் எவை சரியானவை என்பதைத் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க (Selective Judgement) வேண்டும். எந்த நிலையிலும் செய்தியில் பொய்மை கலந்துவிடக் கூடாது "ஐயத்துக்குரியதை விட்டுவிட வேண்டும்" (When in doubt leve it out) என்பது செய்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் ஒன்று.
ஐந்தாவதாக,எதனைப் பெரிதுபடுத்தித் (Ampilify) தரவேண்டும் என்பதை அறிந்து, அதனையே செய்தியாக, சரியான கோணத்தில் எழுதித் தரவேண்டும். நிறைய விவரங்களைச் சேகரித்து இருக்கலாம். எல்லாவற்றையும் செய்தியாக்க வேண்டிய தில்லை. முக்கியமானவற்றையும், குறிப்பிடத்தக்க மனிதர்களையும் சேர்த்துப் பின்னிப் பிணைத்துச் சுவையான, பயனுள்ள செய்திகளைப் படைத்துத் தருதல் செய்தியாளர் பணியாகின்றது.
செய்தியாளர்களுக்கு உரிய பொறுப்புகள்:
செய்தியாளர் மேற்கொள்வது சமுதாயப் பொறுப்பான பணியாகும். செய்தித்தாள்களில் வெளிவருவனவற்றை நம்பிப் பெரும்பாலான மக்கள் செயல்படுகின்றனர். "அச்சிட்டது உண்மையாகவே" இருக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் சுட்டிக்காக்கும் வகையில் செய்தியாளர் நடந்து கொள்ள வேண்டும்.
சில செயல்கள் உண்மையில் நடந்திருக்கலாம். அதற்கான தக்க ஆதாரங்களும் செய்தியாளரிடம் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியே வெளியிட்டால் சில தனிமனிதர்களோ, சமுதாயமோ பாதிக்கப்படுமானால் அவற்றை வெளியிடக் கூடாது. எடுத்துக்காட்டாக, பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்தியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டவரின் பெயரை வெளியிடுவது நல்லதல்ல சாதி, சமயப் பூசலைத் தூண்டிச் சமுதாயத்தின் அமைதியைக் கலைக்கக் கூடிய விவரங்களை வெளியிடக்கூடாது.
- தங்களது செய்தி மூலங்களை இரகசியங்களாகக் காப்பாற்ற வேண்டியது செய்தியாளர்களின் கடமையாகும்.
- சான்றுகளை வெளியிடாமல் வைத்துக் கொள்ளச் சட்டப் பாதுகாப்பும் இருக்கின்றது. சில வேளைகளில் செய்திகளைத் தருகின்றவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
- நேர்காணல் (Interview) மூலம் விவரங்களைச் சேகரிக்கும் பொழுது, பேட்டியாளர் வெளியிட வேண்டாமென்ற குறிப்போடு விளக்கத்திற்காகச் சிலவற்றைக் கூறலாம். அவை சுவையானதாக இருந்தாலும் அவற்றைச் செய்தியில் சேர்க்கக் கூடாது.
- செய்தியாளர், தான் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தவர் என்பதை மறந்துவிடக் கூடாது. தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் நற்பெயரைக் கட்டிக் காப்பது என்றும் அவரது கடமையாகும்.
- தான் சேகரிக்கும் செய்திகளைத் தனது நிறுவனத்திற்கே தர வேண்டும். வேறு எந்த வகையிலும் ஆதாயம் கருதி, திரட்டிய செய்திகளைச் செய்தியாளர் பயன்படுத்தக் கூடாது.
0 Comments